
இது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். மின்னலே, காக்க காக்க, 49-ஆவது படம், இப்போது 50-ஆவது படம் என்று இந்த ஏமாற்றம் நான்கு முறை நடந்தேறியிருக்கின்றது. இனிமேல் பழகிக் கொள்ள வேண்டிய சக்தியைப் பெற்றுவிட்டேன். அஜித் கார் பந்தயத்திலிருந்து விலகியது, அதே சமயம் கௌதம் மேனன் தன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்கவிருப்பது போன்ற சம்பவங்கள் இவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுத்து வருகின்றன. ஒரு வேளை அஜித் கார் பந்தயத்திலிருந்து அக்டோபரில் திரும்பியிருந்தால், முன்பே அறிவிக்கப்பட்டபடி கௌதமுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கலாமோ? அல்லது நான் முந்தய பதிவில் கணித்தது போல், அப்பொழுது கௌதம் வேறு படத்தில் மும்முரமாக இருந்து அஜித்தின் 50-ஆவது படத்தைக் கைக்கழுவியிருப்பாரோ? பல குழப்பங்கள். இதை விதி என்று எடுத்துக் கொள்ளலாமா?
சுவாரசியமாக, அஜித்தின் அடுத்த 51-ஆவது படத்தையும் தயாநிதி அழகிரி தயாரிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, 51-ஆவது படத்தை கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக கௌதம் இயக்குவார் என்று சில தரப்பினர் சொல்கிறார்கள். மாறாக, இதைப் பற்றி அஜித்தோ அல்லது கௌதமோ இன்னும் அதிகாரப்பூர்வமான பதில்கள் கூறாதது வருத்தத்தை அளிக்கின்றது. 51-ஆவது படத்திலும் இந்த கூட்டணி சேரவில்லையேல், ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே சொன்னது போல, இன்னுமொறு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள சக்தி பிறந்துவிட்டது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...
51-ஆவது படத்தைப் பற்றி பேசினோம். 50-ஆவது படம் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். சமீபத்திய தகவல் படி, இதனை தயாநிதி அழகிரி தயாரிக்க வேறொரு இயக்குணர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் தான் 'சென்னை 600028' புகழ், வெங்கட் பிரபு. இப்போதைக்கு படத்தின் பெயர் 'மங்காத்தா - உள்ளே வெளியே'. மங்காத்தாவின் களத்தில், இது மும்பையில் நடக்கும் தாதா கதை என்று தெரிகிறது. அஜித்திற்கு தாதா/ரௌடி பாத்திரம் தான் செய்ய வரும் என்று முடிவு பண்ணிவிட்டார்கள் போல. தலைப்பையும் ஒரு வரி கதையையும் கேட்டால், சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால், இந்த கூட்டணியில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. வெங்கட் பிரபு இதுவரை 'சின்ன' ஹீரோக்களை கும்பலாக வைத்து படங்கள் எடுத்தவர். அவருக்கு தனி ஒரு 'மாஸ்' ஹீரோ படம் பண்ணும் அளவுக்கு திறமை உள்ளதா என்று படம் வந்த பின்னரே தெரியும். வெங்கட் பிரபுவை அவமானப் படுத்துவதோ அல்லது அவரது திறமையை குறை சொல்வதோ, சந்தேகிப்பதோ என் நோக்கம் அல்ல.
இது நம் 50-ஆவது படம். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படம். அப்பேற்பட்ட விஷயத்தில், இத்தனை 'ரிஸ்க்' வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இவர் ஒரு ஆஷ்தானமான அஜித் விசிறி. இவரும் சரணைப் போல படம் முழுவது தல புராணம் பாடி காரியத்தைக் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அதே சமயத்தில், ஒரு பக்கம் சிறிதளவு சந்தோஷம். இந்த இயக்குணர் ஓரளவு அனுபவம் மிகுந்தவர். ராஜு சுந்தரத்தையே தாங்கிக் கொண்டோம். எப்படி நம்ம 'தல'யை வெங்கட் பிரபு கையாளுகிறார் என்று பார்ப்போம். எல்லாம் இனிதே நடைப்பெற இறைவனைப் பிரார்த்திகிறேன்.



